“பாடசாலைகளில் போன் பயன்படுத்தினால்? இனி கடும் சட்ட நடவடிக்கை!”

இங்கிலாந்தில் பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டை சட்டரீதியாகத் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதுவரை வழிகாட்டுதலாக மட்டுமே இருந்த இந்தக் கட்டுப்பாடு, இனி சட்டமாக மாற்றப்பட உள்ளது.

‘சிறுவர் நலன்புரி மற்றும் பாடசாலைகள் சட்டமூலம்’ தடையின்றி நிறைவேற்றப்படுவதற்காகவும், மாணவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களும், சிறுவர் பாதுகாப்பு குறித்த கவலைகளும் இந்த முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகின்றன.

இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் ஜாக்கி ஸ்மித், பிரபுக்கள் சபையில் உரையாற்றுகையில், பாடசாலை அதிபர்களுக்கு தெளிவான சட்ட ஆதரவு வழங்கவும், ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களை கட்டாயமாக்கவும் இந்த மாற்றம் அவசியம் என தெரிவித்தார்.

மேலும், பாடசாலைக்கு வராத மாணவர்களை கண்காணிக்க கட்டாயப் பதிவேடு மற்றும் அவர்களின் நலனைக் கண்காணிக்கும் தனித்துவ அடையாள முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இங்கிலாந்தில் பெரும்பாலான பாடசாலைகள் ஏற்கனவே மொபைல் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதிமுறைகளைப் பின்பற்றுகின்றன. இருப்பினும், சில கல்வி நிர்வாகிகள், இந்தத் தடை மட்டும் போதாது; மாணவர்களின் தொலைபேசிகளை பாதுகாப்பாக வைத்திருக்க தேவையான வசதிகளுக்கு அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இந்த புதிய சட்ட மாற்றம், வகுப்பறைகளில் தேவையற்ற இடையூறுகளை குறைத்து, மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top