தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நேற்று (ஏப்ரல் 21) மாலை 6 மணியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, நாளை (ஏப்ரல் 23) காலை 7 மணி முதல் தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவுக்கான இறுதிக்கட்ட பணிகள் இன்று தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவும் இந்த தேர்தலில், சுமார் 5.73 கோடி வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர்.
கடும் கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்றது. முக்கிய கட்சி தலைவர்கள் தங்களது தொகுதிகள் மற்றும் முக்கிய நகரங்களில் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தனர்.
மு.க. ஸ்டாலின் (தி.மு.க) திருவாரூரில் தொடங்கி கொளத்தூரில் பிரசாரத்தை முடித்தார். எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க) மயிலாப்பூரில் தொடங்கி சேலத்தில் நிறைவு செய்தார். விஜய் (த.வெ.க) பெரம்பூரில் தொடங்கி நந்தனத்தில் பிரம்மாண்ட கூட்டத்துடன் பிரசாரத்தை முடித்தார். சீமான் (நாம் தமிழர் கட்சி) காரைக்குடியில் இறுதிக்கட்ட உரையாற்றினார்.
அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் தத்தமது பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் ஆண்கள் 3,579, பெண்கள் 443 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் உள்ளனர்.
மொத்த வாக்காளர்கள் 5,73,43,291 பேர் ஆகும். இதில் பெண்கள் (2.93 கோடி) ஆண்களை (2.80 கோடி) விட அதிகமாக உள்ளனர்.
பாதுகாப்பு பணிக்காக 300 கம்பெனி துணை இராணுவப் படையினர் மற்றும் 1.20 லட்சம் தமிழக காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுவரை பறக்கும் படையினரால் ₹1,200 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 75,054 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), விவிபாட் (VVPAT) மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு நிறுவப்பட்டு வருகின்றன. பெல் (BEL) நிறுவன பொறியாளர்கள் பரிசோதனை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுமார் 3.60 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளை காலை 6 மணிக்கு வேட்பாளர் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.
மேலும், தேர்தல் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் தலைமைத் தேர்தல் அதிகாரி நேரடியாக வாக்குப்பதிவை கண்காணிக்க உள்ளார்.
