அமெரிக்காவுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை என ஈரான் வெளியுறவு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அல்ஜஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் மோதல் சூழ்நிலை மற்றும் போர்நிறுத்த ஒப்பந்த மீறல்களே இந்த முடிவுக்குக் காரணம் என ஈரான் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அந்தப் பகுதியில் ஈரானிய சரக்குக் கப்பல் அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டதையும், கடல்சார் முற்றுகை தொடர்வதையும் ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.
‘டூஸ்கா’ எனப்படும் ஈரானிய கொடியுடன் சென்ற சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை அதிரடியாக சோதனையிட்டு கைப்பற்றியதாகவும், இதற்கான காணொளியை அமெரிக்கா வெளியிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை “ஆயுதமேந்திய கொள்ளை” என வர்ணித்த ஈரான், இதற்கு தக்க பதிலடி வழங்கப்படும் என எச்சரித்துள்ளது.
இந்த நடவடிக்கையை சீனா கண்டித்துள்ளதுடன், பிராந்தியத்தில் பதற்றத்தை குறைக்க அனைத்து தரப்பினரும் முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேல்–லெபனான் இடையிலான போர்நிறுத்தம் தொடரும் நிலையில், தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்களுக்கு மக்கள் திரும்புவதற்கு இஸ்ரேல் இராணுவம் தடை விதித்துள்ளது. மேலும், மேற்குக் கரையில் இடம்பெற்ற தாக்குதல்களில் பாலஸ்தீனிய உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் ஈரானுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதமர் நெதன்யாகுவின் ஊழல் வழக்குகள் பாதுகாப்பு காரணங்களால் மீண்டும் தள்ளிப்போடப்பட முயற்சிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா சார்பில் சில பிரதிநிதிகளை அனுப்பும் திட்டம் இருந்தபோதிலும், ஈரான் அதில் பங்கேற்க மறுத்துள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
