
விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட அதிகாரிகள் தன்னிச்சையாக நீரை வெளியேற்றி வருவதாக தேசிய விவசாய ஒருமைப்பாடு குற்றம் சாட்டியுள்ளது. இந்நடவடிக்கைகள் நாட்டின் எதிர்கால உணவுப் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் எனவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
தேசிய விவசாய ஒருமைப்பாட்டின் தலைவர் அநுராத தென்னகோன் கருத்து தெரிவிக்கையில், எதிர்கால விவசாய தேவைகளுக்காக நீரை சேமிக்க வேண்டிய நிலையில், அதிகாரிகள் குறுகிய கால நோக்கத்துடன் நீரை வீணடித்து வருவதாக தெரிவித்தார். விவசாய தேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படாத சூழலிலும், குளங்களில் போதிய நீர் இருக்கும் நிலையிலும் விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து தேவையற்ற முறையில் கால்வாய்கள் வழியாக நீர் வெளியேற்றப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே. வெலிகேபொலகே, நீர் முகாமைத்துவ செயலகத்தின் தீர்மானத்திற்கு ஏற்பவே நீர் வெளியேற்றப்படுவதாகவும், மின்சார உற்பத்திக்காக அசாதாரணமான முறையில் நீர் திறக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், விக்டோரியாவிலிருந்து வெளியேற்றப்படும் நீர் ரந்தெனிகல நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்படுவதால் விவசாய நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் விளக்கமளித்தார்.
இதேவேளை, மின்சார உற்பத்தி தொடர்பான முன்நிலை குற்றச்சாட்டுகளையும் எரிசக்தி பிரதி அமைச்சர் இலியாஸ் அக்ரம் நிராகரித்துள்ளார். நீர் வெளியேற்றம் அனைத்தும் திட்டமிட்ட முறையிலேயே நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
