பூக்கள் அல்ல… தோட்டத்தின் அழகே வருமானம்! – வைரலாகும் விவசாயியின் ஐடியா

சந்தையில் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காத சூழலில், தனது தோட்டத்தின் இயற்கை அழகையே வருமானமாக மாற்றி புதுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் தமிழகத்தின் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி.

அவர் தனது நிலத்தில் சூரியகாந்தி சாகுபடி செய்திருந்தார். தற்போது தோட்டம் முழுவதும் மஞ்சள் நிற சூரியகாந்தி பூக்களால் காட்சியளித்தாலும், சந்தையில் அவற்றிற்கு போதிய விலை கிடைக்காததால் சாகுபடி செலவைக் கூட ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பூக்களை குறைந்த விலையில் விற்பனை செய்து நஷ்டமடைவதை விட, தோட்டத்தின் அழகையே வருமானமாக மாற்ற முடிவு செய்தார். சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ மற்றும் செல்ஃபி எடுப்பதில் இளைஞர்கள் காட்டும் ஆர்வத்தை பயன்படுத்திக் கொண்டு, தனது தோட்டத்தை ‘Photoshoot Spot’ ஆக திறந்து வைத்தார்.

இதற்காக நுழைவாயிலில் அறிவிப்புப் பலகையும் அமைத்து, படப்பிடிப்பு கருவிகளுக்கு ஏற்ப கட்டணங்களையும் நிர்ணயித்துள்ளார். கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுக்க ரூ.100, DSLR கேமராவுக்கு ரூ.200, வீடியோ கேமரா படப்பிடிப்புக்கு ரூ.500 என கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

இந்த முயற்சி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அழகான இயற்கை பின்னணியில் புகைப்படம் எடுக்கவும், காணொளிகள் பதிவு செய்யவும் இளைஞர்களும் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.

சந்தை சவால்களை சந்தித்து நின்று விடாமல், காலத்துக்கு ஏற்ப சிந்தித்து தனது உழைப்பை வருமானமாக மாற்றியுள்ள இந்த விவசாயியின் முயற்சி, பலருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top