
கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில், 10,000 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்தப் பயிற்சி திட்டம் இலங்கை இராணுவத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் டி.பி. சரத், கட்டுமான நிறுவனங்களுடன் ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், “கட்டுமானப் பணியாளர்” என்ற பதவியை அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக தரப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது இந்தத் துறையில் சுமார் 7,500 வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டிருந்தாலும், தற்போது உள்நாட்டு இளைஞர்களை கொண்டு தேவையை பூர்த்தி செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தத் திட்டம் உயர்தரப் பரீட்சையை முடித்து மேலதிகத் திட்டங்கள் இன்றி இருக்கும் இளைஞர்களை இலக்கு வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களைத் தேர்வு செய்ய நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நேர்முகத் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன.
கட்டுமானத் துறையில் இளைஞர்கள் இணைவதற்குத் தயங்குவதற்கான முக்கிய காரணம் வேலைவாய்ப்பின் நிலையற்ற தன்மை என பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். “ஒரு ஒப்பந்தம் முடிந்தவுடன் வருமானம் இல்லாத நிலை உருவாகிறது. ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ் நிலையான ஊதியம் மற்றும் சீருடை வழங்கப்பட்டு, தொழிலுக்கு சமூக அங்கீகாரம் கிடைக்கச் செய்யப்படும்” என அவர் தெரிவித்தார்.
சமீபத்திய சூறாவளி பாதிப்புகளுக்குப் பின் வீடமைப்பு திட்டங்கள் அதிகரித்த நிலையில், கட்டுமானத் தொழிலாளர்களின் தேவை மேலும் உயர்ந்துள்ளது. இதனால் உருவான ஆள் பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில் இந்த விரைவு பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
