ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, அரசாங்கம் தனது நிர்வாகத் தோல்விகளையும் முறைகேடுகளையும் மறைப்பதற்காக எதிர்க்கட்சியினர்மீது குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.

இன்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.
அவரது கூற்றுப்படி, உலக சந்தை விலையை விட ஒரு பீப்பாய் எரிபொருளுக்கு சுமார் 45 அமெரிக்க டொலர் அதிகமாக செலுத்தி கொள்வனவு செய்யப்படுகின்றது. நட்பு நாடுகளுடன் பேசி குறைந்த விலையில் எரிபொருள் பெற்றுத்தருவோம் என அரசாங்கம் முன்பு உறுதியளித்த போதிலும், தற்போது அதிக விலையில் கொள்வனவு செய்து அதன் சுமையை மக்கள்மீது திணிக்கின்றதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் நோக்கில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், எரிபொருள் விலை உயர்வும் அரசின் தவறுகளை மறைக்கும் முயற்சியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் காவல்துறை மற்றும் பிற அரச நிறுவனங்களை அழுத்தம் கொடுத்து, பழைய குற்றச்சாட்டுகளை உண்மையாக நிரூபிக்க முயற்சிக்கின்றது என்றும், காவல்துறை மா அதிபர் அரசியல் நோக்கங்களுக்காக அல்லாமல் நாட்டின் நலனுக்காக செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் முழுமையான பயன்பாட்டை பெற அரசாங்கம் தவறிவிட்டதாகவும், சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க வரிச்சலுகைகள் வழங்கி பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ராஜபக்ச குடும்பம் 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடியதாக அரசாங்கம் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். அந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் திணறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“அரசாங்கம் தனது இயலாமையை மறைக்க எதிர்க்கட்சியினர்மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவதை நிறுத்தி, நாட்டின் தற்போதைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும்,” என நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.