
பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகத்தைச் சுற்றியுள்ள சர்ச்சைகள் குறித்து விரிவான விசாரணைகள் தொடங்கப்படவுள்ளதாக அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் அமினுல் ஹக் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற பிசிபி தேர்தல்களில் முறைகேடுகள், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தேர்தல் செயல்முறைகளில் தலையீடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய, ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழு மார்ச் 11 அன்று அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவை அமைத்தது அரசின் நேரடி தலையீடு என பிசிபி குற்றம்சாட்டியிருந்தாலும், முன்னாள் அரசாங்கமே கிரிக்கெட் சபை தேர்தல்களில் தலையிட்டதாக அமைச்சர் அமினுல் ஹக் பதிலளித்துள்ளார்.
விசாரணைக் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபையுடன் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற ஆடவர் டி20 உலகக்கிண்ணத் தொடருக்கு பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பங்களாதேஷ் அணி அனுப்பப்படவில்லை. இதனால், அந்த இடத்தை ஸ்கொட்லாந்து அணி நிரப்ப அனுமதி வழங்கப்பட்டது.
மேலும், உலகக்கிண்ணத்தில் பங்கேற்காததற்கான காரணங்கள் மற்றும் விளையாட்டு இராஜதந்திரத்தில் ஏற்பட்ட தோல்விகள் குறித்து ஆராய, ஈத் பண்டிகைக்கு பின் இன்னொரு விசாரணைக் குழுவும் அமைக்கப்பட உள்ளது.
இந்நிலையில், முன்னணி வீரர் தமீம் இக்பால் மற்றும் டாக்கா கிரிக்கெட் நிர்வாகத்தில் உள்ள சில அதிகாரிகள், தேர்தல் நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்ததாக முன்பே குற்றஞ்சாட்டியிருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்யும் காலக்கெடு இருமுறை நீட்டிக்கப்பட்டது மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரங்களும் தற்போது விசாரணையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.