இலங்கையர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகளை அவுஸ்திரேலியாவில் மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக முக்கியமான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெத்யூ டக்வொர்த் கலந்து கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் கல்வி மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட பல துறைகளில் வலுவாக இருப்பதை உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.
கல்வி, விவசாயம் மற்றும் நிலையான அபிவிருத்தி துறைகளில் இலங்கைக்கு தேவையான ஆதரவை வழங்க அவுஸ்திரேலியா தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மேலும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மனிதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தன.
அதேவேளை, மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலை அவுஸ்திரேலியாவுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒருமித்த கருத்தும் இந்த சந்திப்பில் உருவானது