ஜப்பானின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் கெய்சுகே ஹோண்டா, ஈரான் உலகக் கிண்ணத்தில் பங்கேற்க வேண்டும் என ஆதரவு தெரிவித்ததையடுத்து, அமெரிக்க நிறுவனத்துடன் இருந்த தனது விளம்பர ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா இணைந்து நடத்த உள்ள அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் ஈரான் அணியும் பங்கேற்க வேண்டும் என்று ஹோண்டா தனது ‘X’ சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். “இது உணர்ச்சிவசப்படுத்தக்கூடிய விஷயம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இருப்பினும், தனிப்பட்ட முறையில் ஈரான் உலகக் கிண்ணத்தில் விளையாட வேண்டும் என்பதே என் விருப்பம்” என்று அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் தாக்குதல்களை முன்னிட்டு, உலகக் கிண்ணத்தில் பங்கேற்பது சாத்தியமற்றதாக இருக்கலாம் என்று ஈரானின் விளையாட்டுத்துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையிலேயே ஹோண்டா தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த கருத்து வெளியீட்டிற்கு பின்னர், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனம், ஹோண்டாவுடன் இருந்த விளம்பர ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 39 வயதாகும் ஹோண்டா, ஜப்பான் கால்பந்து வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்ற முன்னாள் வீரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.